சென்னை, ஜூன் 28 –
சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கை மேம்படுத்துவது தொடர்பாக மீனம்பாக்கம் ரியாலிட்டி பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கார் பார்க்கிங் இடத்தில் திரையரங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பி.வி.ஆர்.ஐனாக்ஸ் மல்டி பிளக்ஸ் நிறுவனத்துடன் துணை ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
திரையரங்கு அமைய உள்ளதைக் குறிப்பிட்டு கார் பார்க்கிங் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் ஒப்புதல், சென்னை மாநகர காவல் ஆணையரின் தடையில்லா சான்றுகள் பெற்று கட்டுமானங்கள் முடித்து 2023 பிப்ரவரி முதல் திரையரங்குகளும் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்டப்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை எனக் கூறி திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஜூன் 20 ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பி.வி.ஆர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விமான நிலைய பார்க்கிங் பகுதியில் உணவகங்கள், கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்குக்கு அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் 20 கோடி ரூபாய் திரையரங்குக்காக முதலீடு செய்துள்ளதாகவும் பி.வி.ஆர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து மனுவுக்கு ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.