சுசீந்திரம், ஜூலை 31 –
குமரி மாவட்டத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக சுசீந்திரம் பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து சுசீந்திரம் துவாரகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஆஸ்ரமம் செல்லும் பழைய ஆற்றுப்பகுதியில் கரை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஆற்றைவிட பள்ளமாக காணப்படும் சாஸ்தா நகர், ஆஞ்சநேயா நகர், தாணுமாலய நகர், கவிமணி நகர், ஆசாத் நகர், கற்காடு, பரப்பு விளை, அக்கரை போன்ற பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பின்பு உடைப்பு ஏற்பட்ட பகுதி மண் கொட்டி சாலை போடப்பட்டது.
எனினும் நாட்கள் செல்லச் செல்ல மண் கொட்டிய பகுதி தாழ்வாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் எனவும் ஆற்று குப்பை கூளங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதன் பெயரில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நாளிதழுக்கு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பழைய ஆற்றினை தூர்வார வேண்டும் எனவும் தாழ்வான பகுதியை மண் கொட்டி உயர்த்தி தடுப்பு சுவர் கட்ட வேண்டும் எனவும் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் உள்ள துவாரகா கிருஷ்ணன் கோவில் அருகே ஆற்றில் உள்ள செடி கொடிகள் அகற்றப்பட்டு தாழ்வான பகுதியில் மண் அடித்து உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா இன்று பழைய ஆற்றின் கரை ஓரம் தாழ்வாக இருந்த மதில் சுவரை கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதனால் சுசிந்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சுசிந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை வார்டு கவுன்சிலர்கள் இதற்கு முயற்சி எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.