நாகர்கோவில், ஜூலை 11 –
நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் நீங்களாக இதர பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் நான்குநேரி, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன.
சுங்கச்சாவடிகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்கள் மாதாந்திர பாஸ் வாங்கி பயணிக்கலாம். எனினும் மாதாந்திர பாசில் ஒரு மாதத்திற்கு 50 முறை மட்டுமே சுங்கச்சாவடி கடக்க முடியும். 50 முறைக்கு மேல் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களும் மாதாந்திர கட்டணம் செலுத்தி இயக்கப்படுகின்றன.
நாகர்கோவில் மண்டலத்தில் 20 என்ட் டூ என்ட் பஸ்கள் உட்பட 150 பஸ்கள் நான்குநேரி சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வருகின்றன. 50 முறைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி நாங்குநேரி சுங்கச்சாவடியில் அடிக்கடி பஸ்களை நிறுத்தி வைப்பதும் பின்னர் அவற்றை விடுவிப்பதும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் சுங்கச்சாவடியில் பஸ்கள் கடந்து சென்றதற்கு கட்டணம், தாமத கட்டணம், அதற்கு வட்டி என கணக்கிட்டு அதிகபட்சம் என்ட் டூ என்ட் பஸ்களுக்கு 2010-ம் ஆண்டு முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 83 ஆயிரம் கட்டண பாக்கியாகவும், குறைந்தபட்சம் ஒரு பஸ்ஸிற்கு 50 ஆயிரம் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் தென் மாவட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணமாக ரூ. 246 கோடி செலுத்த உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது என்பதால் உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மேலும் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து துறையிலும் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு வழி கட்டணமாக மட்டுமாவது வசூலிக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் நேற்று காலை முதல் அரசு பஸ்களின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் பணத்தை செலுத்துவதற்கான நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்று பஸ்கள் சுங்கச்சாவடிகளில் அனுமதிக்கப்பட்டு வந்தது.



