சென்னை, ஆக. 06 –
கிரசென்ட் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சிலின் (CIIC) 5-வது ‘மெகா டெமோ டே’ மற்றும் ‘ஸ்டார்ட்அப் ஷோகேஸ் 2026’ கண்காட்சி நிகழ்வு வண்டலூர் சி.ஐ.ஐ. சி வளாகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் இடம் பெற்றன.
மேலும் இதில் உயிர் அறிவியல் தொழிற்துறை 5.0, தூய்மையான போக்குவரத்து, வேளாண் வணிகம், ஊட்டச்சத்து மருந்துகள் சார்ந்த சிறு, குறு, நடுந்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெறவுள்ளன.
இக்கண்காட்சி குறித்து சிஐஐசியின் நிறுவனத் தலைவர் அப்துல் காதிர் கூறியதாவது: “7 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஐ.ஐ.சி ஒரு சிறிய அமைப்பாக தொடங்கப்பட்டடு தற்போது 157க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இங்கு இன்குபேஷன் (வளர்ச்சி ஆதரவு) பெற்று வருகின்றன. 80 நிறுவனங்கள் வெற்றிகரமாகத் தங்கள் வளர்ச்சியை நிறைவு செய்துள்ளன. இந்நிறுவனம் ₹520 கோடிக்கும் அதிகமான நிதியுதவியைப் பெற்றுத் தந்துள்ளதுடன் 2,107-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது மற்றும் 1,00,000 சதுர அடிக்கும் அதிகமான இன்குபேஷன் உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது.”
மத்திய அரசின் 8 அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசின் 2 அமைச்சகங்களின் ஆதரவுடன் செயல்படும் சி.ஐ. ஐ. சி இதுவரை 200 காப்புரிமைகளுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும், ‘ஆத்ம நிர்பார் பாரத்’ (சுயசார்பு இந்தியா) உணர்வை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோருக்கான ஒரு உண்மையான உந்து சக்தியாகவும் இது திகழ்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
மேலும் எம்.எஸ்.எம்.இ கூட்டு இயக்குநர் கே. தயாளன், இந்திய விண்வெளி விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, முதல் பார்ட்னர் நிறுவனர் குமார் வேம்பு, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிர்வாகத் தலைவர் டாக்டர் ஜின்னா ரஃபிக் அகமது, மெய்டி ஹப் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பன்னீர்செல்வம், டி.எஸ் நிறுவன குழுமத்தின் இயக்குனர் மஹாலிங்கம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.



