சிவகங்கை, ஜூன் 28 –
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கா. பொற்கொடி இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தவர். 2013-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணிபுரிந்தவர். 2014-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய செயலர் (மாவட்ட வருவாய் அலுவலர்) ஆக பணிபுரிந்தவர். 2019-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்தவர்.
2021-ம் ஆண்டு சென்னையில் ஆவின் பொது மேலாளர் (நிர்வாகம்) ஆக பணிபுரிந்தவர். 2023-ம் ஆண்டு சென்னையில் துணை ஆணையர் (கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்) ஆக பணிபுரிந்தவர். 2024-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கான பதவி உயர்வு பெற்றவர். ஜூலை 2024 முதல் இணை மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம், சென்னை) ஆக பணிபுரிந்ததை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொறுப்பேற்று தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களுக்கான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் சாமானிய மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதற்கான உரியவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் பணியாற்றுவதற்கான சிறப்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்தார்.