சிவகங்கை, ஆக. 03 –
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் துறை வாரியான மாவட்ட அலுவலகங்களில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள உயர் அதிகாரிகளை கோரிக்கை மனுக்கள் தொடர்பாக சந்திக்க முடியவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள நிரந்தர எண் உள்ள ( ஜி .யூ .ஜி ) செல்போனில் பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அதையும் அதிகாரிகள் அட்டென்ட் செய்வதில்லையாம் . ஆனால் அதிகாரிகள் இதற்கு மாற்றாக தனிப்பட்ட ஒரு செல்போனை பயன்படுத்திக் கொள்வதாக பரவலான குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது .
சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் துறை அதிகாரிகளை சந்திக்கச் சொல்லும்போது அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லாவிட்டால் அங்கிருக்கும் மற்ற பணியாளர்கள் உயர் அதிகாரியின் செல்போன் எண்ணைத் தர மறுக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை அலுவலகங்களில் அதிகாரிகள் இல்லாத போது சம்பந்தப்பட்ட அதிகாரி எங்கு சென்றுள்ளார் ? என்று கேட்டால் எல்லா அலுவலகங்களிலும் ஒரே பதில் தான் வருகிறது . அது என்னவென்றால் அதிகாரி இப்போது முகாம் சென்றுள்ளார் என்பதுதான் .
இதேபோல் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு வாகனங்கள் அதிகமாக வெளியில் சென்று வருவதையும் பார்க்க முடிகிறது. இவை ஒருபுறம் இருக்க அலுவலகங்களில் அதிகாரிகளின் செல்போன் எண்ணை முறையாக வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் . எனவே சிவகங்கையில் சிறப்பாக பணியாற்றி வரும் புதிய மாவட்ட ஆட்சியர் இது போன்ற விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது .