சிவகங்கை, ஜுலை 14 –
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ள ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 15.07.2025 முதல் செப்டம்பர் 2025 வரை ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதில் காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 11 பேரூராட்சிகளில் 22 முகாம்களும், 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும், 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் என ஆக மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும், இம்முகாம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் கடந்த 07.07.2025 அன்று முதல் துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் வாயிலாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அந்தந்த துறைகளால் சேவைகள் வழங்கப்படும். அதில் நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
இதில் சொத்துவரி, குடிநீர் வசதி உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலி மனைவரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவைகள் நகர்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளிக்க விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகள், இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம்.
இச்சேவைகளை பொதுமக்கள் பெறும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 15.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக முகாம்கள் தொடங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய வராப்பூர் சமுதாயக் கூடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைக்கவுள்ளார்.
மேற்கண்ட தினத்தன்று காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கென கழனிவாசல் முத்துகிருஷ்ணா மஹாலிலும், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 23,24,25,26,27 ஆகிய பகுதிகளுக்கென மாஸா மஹாலிலும், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 1,2,3 ஆகிய பகுதிகளுக்கென அனுசியா மஹாலிலும், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:1,2,11 ஆகிய பகுதிகளுக்கென சொர்ணமுத்து மஹாலிலும், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென பருத்திக்கண்மாய் ஏ.எஸ்.கார்டன் மஹாலிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை எவ்வித இடையூறுமின்றி அளிப்பதற்கு ஏதுவாக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பயன்களும் உடனடியாக வழங்கப்படும். பரிசீலனைக்குட்படுத்தப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
எனவே, இம்முகாமினை முறையாக பயன்படுத்திக் கொண்டு தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளில் உரிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜி. அரவிந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார் உடனிருந்தனர்.