கோவை, ஆக. 25:
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் கரியாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கே.7080 பி.கரியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், டாப்செட்கோ மற்றும் டாம்கோ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா நடைபெற்றது.
இதில், சங்கத்தின் செயல்பாட்டு எல்லைக்குள் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இம்முகாமில் பலர் கலந்து கொண்டு கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை சங்கச் செயலாளர் நடராஜனிடம் வழங்கினர். முகாமில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



