திருப்பூர், ஜூலை 22 –
திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் வழி பேருந்து நிலையம் 22-ம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் தெற்கு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக முதல்வர், துணை முதல்வர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்டோருக்கு தியாகி திருப்பூர் குமரன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக ரயில்நிலையம் அருகே உள்ள குமரன் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் அவரது கொள்ளு பேரன் பிரபு-பூர்ணிமா குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் நிர்மல்ராஜ், ஜீவானந்தம் மற்றும் திருப்பூர் கொடி காத்த குமரன் அறக்கட்டளை நிர்வாகிகள் பாரூக், கவுசிக், கண்ணன் சம்பத்குமார், சேகர், சுந்தரம், கனகராஜ், சுப்பிரமணி உள்ளிட்டோர் இருந்தனர்.