நாகர்கோவில், ஜூலை 16 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் படு ஜோராக காலம் காலமாக நடந்து வருகிறது. ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு அரசு இலவச அரிசி கொடுத்து வருகின்றது. ஆனால் அதை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தாமால் கடைகளில் விற்கப்படும் நவீன அரிசியை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் இலவச அரிசியை புரோக்கர்கள் மூலமாகவும் ரேசன் கடைக்காரர்கள் மூலமாகவும் பொதுமக்களிடம் இருந்து சொற்ப விலை கொடுத்து வாங்கி அதை ஒரு சில இடங்களில் பதுக்கி வைத்து கேரளா மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அங்கு இலவச அரிசி அரசு வழங்கவில்லை. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அரிசியை நல்ல விலை கொடுத்து கேரளா புரோக்கர்கள் வாங்கி வருகின்றனர். இது காலம் காலமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் கடத்தல் ரேசன் அரிசியை வாகனங்களோடு பிடித்து வழக்கு பதிவு செய்த பின்னரும் இதே நிலைதான் நீடித்து வருகிறது .
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ரேசன் கடத்தல் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். பல வருடங்களாக இவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை, பருப்பு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு கடத்தல் பிரிவு அதிகாரி புஷ்பா தேவிக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் இரவோடு இரவாக சிவகுமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது வீட்டில் 3 டன் கடத்தல் ரேசன் அரிசி வெளியே வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் வீட்டின் உள்ளே இருந்த 5 டன் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளை பறிமுதல் செய்ய முயற்சி செய்த போது வீட்டில் உரிமையாளர் தலைமறைவானதால் வீட்டின் உள்ளே செல்ல முடியவில்லை. எனவே கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன்னிலையில் வீட்டின் உள்ளே இருந்த ரேஷன் பொருட்களை எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பூட்டிய வீட்டிற்குள் செல்ல முடியாததால் இறுதியாக வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் முறைப்படி அனுமதி பெற்று வீட்டில் கதவை உடைத்து ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் கூறிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.