நாகர்கோவில், ஜூன் 30 –
முதல் முறை எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியும் மீண்டும் மீண்டும் தவறு செய்த குவாரி உரிமையாளர்கள். பொதுமக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கையால் 3 குவாரி, 2 கிரஷர் உரிமையாளர் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் நடவடிக்கையால் மாவட்டங்களில் குற்றங்கள் குறைந்து உள்ளது. குற்றமில்லா குமரியை உருவாக்கும் நோக்கில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை தொடங்கி கிராமப்புறங்களில் போலீசார் பொதுமக்கள் நல்லறவை ஏற்படுத்தி கிராமப்புறங்களிலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையால் விபத்துகள் முன்பை விட 50 சதவீதம் குறைந்து உள்ளது.
சாலை உயிரிழப்பை முற்றிலுமாக தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் டாரஸ் லாரிகளால் நிகழும் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. அதிவேகமாக டாரஸ் லாரிகளை இயக்கும் ஓட்டுனர்களின் கவனக்குறைவாலும், சாலை விதிமுறைகளை பின்பற்றாததாலும் பலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த லாரிகள் வரும்போது மற்ற வாகன ஓட்டிகள் பயந்து சாலையின் ஓரம் ஒதுங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையில் நிறுத்தி விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து எஸ்பி ஸ்டாலின் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் பகுதியில் செயல்படும் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் அரசு அனுமதித்த அளவிலான பாரங்களை மட்டுமே அனுமதித்து வருவதாகவும் தங்களிடம் முறையான பாஸ் உள்ளது எனவும் பொய்யான தகவலை வழங்கி விட்டு தொடர்ந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமான பாரங்களுடன் போலி பாஸ் பயன்படுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குவாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட 9 பேர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எஸ்பி ஸ்டாலினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.