மார்த்தாண்டம், ஆக. 8 –
குழித்துறையில் கழிவு நீரை வடிகாலில் விட்ட தனியார் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தினசரி பிரித்து சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை உரத்திற்கும் மக்காத குப்பை சிமெண்ட் பேக்டரிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை போல் தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு நீரை வடிகாலில் விட தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் குழுவினர் குழித்துறை பகுதியில் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு தனியார் பள்ளியில் இருந்து கழிவு நீர் வடிகாலில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது மூடப்பட்டு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டது.