குளச்சல், ஆக. 28 –
குளச்சல் லியோன்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெனோ (32), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு டயானா என்ற மனைவியும், மூன்றரை வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் உண்டு.
நேற்று மாலையில் 2 குழந்தைகளும் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது நேரமாக சத்தம் கேட்கவில்லை. அத்துடன் குழந்தைகள் வீட்டிற்குள் வராததால் சந்தேகமடைந்த டயானா முன்பகுதியில் சென்று பார்த்தார். அப்போது குழந்தை ரியானா வீட்டின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து கிடந்தது.
உடனே அவர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



