கன்னியாகுமரி, ஜூன் 28 –
கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வசதியாக குளச்சலிலிருந்து திருவனந்தபுரம், கொச்சி வழியாக முனம்பம் துறைமுகம் வரை தினசரி பேருந்து இயக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கேரள துறைமுகங்களை தங்குதளமாக வைத்து மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். கொல்லம் போன்ற துறைமுகப் பகுதியை தங்குதளமாக வைத்து தொழில் செய்பவர்கள் வாரம் ஒருமுறையும் கொச்சி, முனம்பம் போன்ற பகுதிகளிலிருந்து மீன்பிடித் தொழில் செய்பவர்கள் மாதம் ஒருமுறையும் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவர்கள் ஊருக்கு வந்து செல்வதற்கு நேரடி அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி பயணிக்கின்றனர். இதனால் அதிகமான பணச்செலவும் பயணங்களில் பாதுகாப்பில்லாத நிலையையும் எதிர்கொள்கின்றனர். இவைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையும் கேரள அரசு போக்குவரத்துத் துறையும் நேரடியாக அரசு பேருந்துகளை இத்தடத்தில் இயக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக இரு அரசுகளிடமும் கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இது இருமாநிலம் சம்மந்தப்பட்டதால் இன்டர்ஸ்டேட் ஒப்பந்தம் போடவேண்டும் காலத்தை விரயமாக்குகிறது. கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆன்றனிராஜ் அவர்களை நெய்தல் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்தபோது இருமாநில போக்குவரத்துக்கழக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்கும்போது இந்த கோரிக்கயை ஒரு அஜென்டாவாகக் கொண்டுவந்தால் நிச்சயமாக பேருந்து இயக்குகிறோம் என்றார்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட இந்த கோரிக்கை அஜென்டாவில் சேர்க்கப்படவில்லை. அதனால்தான் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சரின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். தாங்கள் இதில் தலையிட்டு குளச்சலில் இருந்து சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கருங்கல், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, எர்ணாகுளம் வழியாக முனம்பம் துறைமுகத்திற்கு தினசரி பேருந்து இயக்க வேண்டுமென்று தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் கூறியுள்ளார்.