மார்த்தாண்டம், ஆக. 7 –
குலசேகரம் அருகே பிணந்தோடு என்ற பகுதியில் ஜார்ஜ். ரப்பர் வியாபாரி. இவர் அந்த பகுதியில் சொந்தமான ரப்பர் உலர் குடோன் வைத்திருந்தார். இந்த குடோனில் ஏராளம் ரப்பர் சீட்டுகள் உலர அடுக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்று (7-ம் தேதி) அதிகாலை 5 மணி அளவில் ரப்பர் குடோனில் இருந்து திடீரென புகை கிளம்பி தீ பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜார்ஜுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ரப்பர் குடோனுக்குள் இருந்த சுமார் 4 டன் எடையுள்ள ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமானதாகவும் அதன் மதிப்பு ரூ 10 லட்சம் எனவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.