நாகர்கோவில், ஜூன் 13 –
குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின்131-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மரிய ஜெனிபர் தெரிவித்ததாவது :- குமரி தந்தை மார்ஷல் நேசமணி 1895 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் பள்ளியாடி அருகேயுள்ள நட்டாலம் ஊராட்சிக்குட்பட்ட நேசர்புரம் எனும் கிராமத்தில் அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கல்வி என்றால் என்ன என்பதே தெரியாத வறுமையில் வாடிய சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோரை அணுகி அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப கேட்டு கல்வி உயர்வுக்காகப் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் பரவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேசமணி அவர்கள் பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைத்திட ஏற்பாடு செய்தார். இதனால் அவரது புகழ் திருவிதாங்கூர் முழுவதும் பரவியது. பனை மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களைப் போராடி வெற்றி பெற்றார். தமிழ்ப்பகுதிகள் தனி ஜில்லாவாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கினார். 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய் தமிழகத்துடன் இணைந்து அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி ஆவார். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி குமரித் தந்தை மார்ஷல் என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக பெரியவர் என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர்; நீதிக்காகப் போராடிய நெஞ்சுரமிக்கத் தலைவர்; நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர்; தன்னலம் கருதாத தியாகச் செம்மல்; அன்பே உருவான அரும்பெருந்தலைவர்; தந்தைக்குத் தந்தையாய் – தலைவனுக்குத் தலைவனாய் இருந்து வழிகாட்டியாய் வாழ்ந்து வான்புகழ் கொண்ட மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவருடைய திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். உடன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிம்லர், கன்னியாகுமரி மண்டலச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.