நாகர்கோவில், ஜூலை 25 –
குமரி மாவட்டத்தில் முதல் இடைத்தேர்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவியர் கற்றல் திறனை பரிசோதிக்கவும், பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும் மாணவ மாணவியருக்கு ஸ்லிப் டெஸ்ட்களை நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு மாதம் தோறும் இந்த தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வுகள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதல் இடைத்தேர்வு வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடக்கிறது. காலை, பிற்பகல் என்று இரு வேளையில் தேர்வு நடத்தப்படுகிறது. காலையில் தேர்வுகள் 11.15 முதல் 12.45 மணி வரையும் பிற்பகல் தேர்வுகள் 2:45 மணி முதல் மாலை 4:15 மணி வரை நடத்தப்படுகிறது.
கால அட்டவணைப்படி ஒவ்வொரு நாளும் வினாத்தாள் மையங்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும் என்று குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.