கீழக்கரை மே 14-
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை அகற்ற எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இது சம்பந்தமான சமூக,சமுதாய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாய்களை அகற்ற கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1) கீழக்கரை நகராட்சி, 500 பிளேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த மூன்று வருட காலங்களில் சுமார் 2800 க்கும் அதிகமான பொதுமக்களை நாய்கள் கடித்து இவர்கள் அனைவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள்,வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த தகவல் கீழக்கரை அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் மனு மூலமாக பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும்,இணையங்கள் வாயிலாகவும் வெளியிடுவது.
2) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்காத கையாலாகதனத்தை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் மூலமாக அதிக அளவு குறிப்பாக 3000 மேற்பட்ட போஸ்ட் கார்டு களை அனுப்புவது
3) தேவை ஏற்படின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க மேன்மை மிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்வது
4) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் பொதுமக்களை இணைத்து ஜனநாயக வழி போராட்டம் நடத்துவது
இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.