சென்னை, ஜூன் 28 –
பிறவி குறைபாடான முதுகுத்தண்டு பாதிப்புடன் பிறக்கும் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான திட்டத்தை “ப்ராஜக்ட் ஜீவன் செயல் திட்டம்” என்ற பெயரில் அறிமுக நிகழ்ச்சி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துமனையில் நடைபெற்றது. மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரூ ரோட்டரி கிளப்-ன் பங்களிப்புடன் இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம், இணைக்கப்பட்ட வட நோய்க்குறி, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலைகள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவை சிகிச்சையை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
டாக்டர். பாலமுரளி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தென்னிந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நரம்புக் குழல் குறைபாடுகள் இருப்பதும் மற்றும் குறைந்த வருவாய் உள்ள பின்புலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் இதனால் பாதிக்கப்படுவதும் பிராஜெக்ட் ஜீவன் உருவாக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை முறையாக சரிசெய்யாவிட்டால், கடுமையான ஊனங்களுடன் இக்குழந்தைகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.
“சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான சிகிச்சையின் மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த முன்னெடுப்பானது வெறுமனே அறுவை சிகிச்சைகள் குறித்தது மட்டுமல்ல; ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியுள்ள சிறப்பான எதிர்காலம், கண்ணியம் மற்றும் சாத்தியத்திறனை அவர்கள் பெறுமாறு செய்வதே இதன் நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.
மித்ரா ரோட்டரி கிளப்-ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சரவணன் பேசுகையில், “ஜீவன் செயல்திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜீவன் செயல்திட்டம் மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய நிலையிலுள்ள வசதியற்ற, பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பதையும் கடந்து அவர்களின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்கும் திட்டத்தை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறோம்” என்றார்.