வேலூர், மார்ச் 05 –
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூர் கிராமம் முதல் கரிகிரி கிராமம் வரை 102.63 கோடி மதிப்பீட்டில் 74 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள பகுதி-1 நிலை-அ, வேலூர் சுற்றுச்சாலை பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & வனத்துறை அமைச்சர் 14.03.2025 சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சுற்று வட்டச்சாலை பகுதி-1 அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ய 98.25 கோடிக்கு நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் துறை மூலம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கதிர் ஆனந்த்: காட்பாடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சுற்றுச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் காட்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை காட்பாடி சன்பீம் பள்ளி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கி காரணம்பட்டு வரை சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. சுமார் 125 முதல் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை பணிகள் நடைபெறவுள்ளன.
இத்திட்டத்தை முடிக்க அரசு ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சாலையால் காட்பாடியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.
தற்போது சித்தூரிலிருந்து வரும் வாகனங்கள் காட்பாடி வழியாகச் செல்வதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை விரைவில் திறக்கப்படும். அதன் பிறகு காட்பாடிக்குள் கனரக வாகனங்கள் வருவது குறைந்து போக்குவரத்து சீராகும்.
காட்பாடியில் நிலவும் போக்குவரத்து சிக்கலுக்கு மற்றொரு முக்கிய காரணியான ரயில்வே மேம்பாலம் குறித்த கேள்விக்கு: ஏற்கனவே இருந்த பழைய ரயில்வே மேம்பாலம் 2 கோடி ரூபாய் செலவில் ‘கார்பன் டெக்னாலஜி’ மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் சுமார் 45 முதல் 50 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது புதிய மேம்பாலத்திற்கு டெண்டர் விட்டுள்ளது. தற்போது மண் பரிசோதனை மற்றும் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் நிறைவடையும் போது, காட்பாடி நகரின் கட்டமைப்பு மேம்படுவதுடன் பொதுமக்களின் பயண நேரமும் பெருமளவு குறையும் என்று கூறினார்.



