பரமக்குடி, ஜூலை 11 –
காட்டுப்பரமக்குடி தாழை மதலை கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியில் தாழை மதலை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கிராம மக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கருப்பணசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் குலதெய்வ குடிமக்கள், இளைஞர்கள், மகளிர் மன்றங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.