களியக்காவிளை, ஜூலை 27 –
குமரி மாவட்டத்தில் சிலர் தனியார் நிலத்தில் இருந்து பெரிய பாறைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி களியக்காவிளை போலீஸ் இன்ஸ் பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் பொன்னப்ப நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு தனியார் நிலத்தில் பெரிய பாறைகளை உடைப்பதை பார்த்து அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் 2 பேர் பாறை உடைக்கும் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சட்ட விரோதமாக பாறை உடைக்கப்படுவது தெரிய வந்தது.
இது தொடர்பாக வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நிலத்தின் உரிமையாளர், வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல், பாறை உடைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


