கருங்கல், ஆக. 9 –
கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆண்டனி. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சந்திரகலா. இவர்கள் மகன் சாகித் ஜெட்லி (20). நாகர்கோவில் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தபோது பஸ் பயணத்தில் திங்கள் நகர் பகுதியில் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அதை மறைத்து சாகித் ஜெட்லியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனிமையில் சென்று வந்துள்ளனர். இவர்கள் நெருங்கி பழகி வந்தது இரண்டு விட்டார்களுக்கும் தெரிய வந்து, கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இளம் பெண்ணை மீட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த சாதிக் ஜெட்லி அந்த பெண்ணுடன் பழகியபோது எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெண்ணின் கணவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சாகித் ஜெட்லி மற்றும் நெய்யூர் பகுதி சேர்ந்த பெண் ஒருவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சாகித் ஜெட்லியை விசாரிக்க கடந்த 28-ம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்கு சைபர் கிரைம் போலீசார் மற்றும் கருங்கல் போலீசார் என மொத்தம் நான்கு பேர் சென்றனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகித் ஜெட்லி தப்பி ஓடினார். அவரது பாட்டி சூசை மரியாள் என்பவர் கீழே விழுந்து இறந்தார். போலீஸ் தள்ளியதில் தான் சூசை மரியாள் இறந்தார் என்று குடும்பத்தினர் குற்றச்சாட்டி உடலை வாங்க மறுத்தனர். கருங்கல் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நான்கு நாட்களுக்கு பின் நீதிமன்ற உத்தரவு படி உடலை வாங்கி சென்றனர். அவரது பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாகித் ஜெட்லியை நேற்று மாலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.