கன்னியாகுமரி, நவ. 10 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி சுற்றுலா வரும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு அடுத்தபடியாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிடுவார்கள்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். வார இறுதி விடுமுறையையொட்டி 8ம் தேதி (சனிக்கிழமை) 11 ஆயிரத்து 459 பயணிகளும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 11 ஆயிரத்து 433 பேரும் மொத்தம் 2 நாட்களில் 22 ஆயிரத்து 892 பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டு உள்ளனர். இதில் மொத்தம் 2 நாட்களில் 3 ஆயிரத்து 964 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


