ஈரோடு, ஜூலை 25 –
ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் கடந்த 2014-ம் ஆண்டு 30 தொழில் மற்றும் வர்த்தகத் துறை நண்பர்கள் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 93 அறங்காவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகளுக்கு உதவுதல், குளம், குட்டைகளை தூர் வாருதல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கழிவறை கட்டி கொடுத்தல் ஆகிய பணிகள் செய்து தரப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் சுமார் ரூ.48 கோடியில் நல உதவிகளை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அனுமதியுடன் 16 டயாலிசிஸ் எந்திரங்கள் மூலம் 11 ஆண்டுகளில் 1503 பேருக்கு ஒரு லட்சம் முறை டயாலிசிஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய நன்கொடையாளர்கள், டாக்டர்கள் மற்றும் அறங்காவலர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கே.எம். சிவ்குமார், நல வாழ்வு குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டாக்டர் பிரபாகர், ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அறக்கட்டளை உறுப்பினர்கள், டாக்டர்கள், நர்சுகள், ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும், கேடயமும் வழங்கி பாராட்டினார்கள். இதில் இணை இயக்குனர் சாந்தகுமாரி, உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா, சூப்பிரண்டு வெங்கடேஷ், உதவித்தலைவர் ரவிசங்கர், ஈரோடு ஆஸ்பத்திரியின் முன்னாள் சூப்பிரண்டு உசேன் அலி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.