நாகர்கோவில், ஆக. 6 –
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று நாகர்கோவில் வந்த தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது வெளியுறவு கொள்கையானது இந்தியாவிற்கு மிகவும் பலகீனமாகியுள்ளது. அதற்கு மேல் அதில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை, உலக அளவில் பாகிஸ்தானில் இருந்து நம் மீது தீவிரவாத தாக்குதல், 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் உலக அளவில் ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டித்து ஒரு இடத்திலும் கூறவில்லை, அதுவே நமது பலகீனம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எங்கும் கிடையாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். மாநில அரசுக்கு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மேல்நிலை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளது. பணியாளர் நியமிக்கவும் மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மறைந்த தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இவ்வளவு நாள் கழித்து குடியரசு தலைவருக்கு அதனை அனுப்பியுள்ளார். அதில் என்ன காரணம் கூறுகிறார்கள் என்றால் பணியாளர் நியமனம் ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இல்லை என்று கூறுகிறார்.
இதுவரை இருந்ததுதான் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும்போதுதான் அதில் குறை இருக்கிறது என்று கண்டுபிடித்தார்களா? என்பது தெரியவில்லை. துணை வேந்தர் நியமனத்திற்கு மாநில அரசு மூன்று பேரை நியமனம் செய்கிறார்கள், அரசு தரப்பில் ஒருவர், சிண்டிகேட் மெம்பர் ஒருவர், கல்வியாளர் ஒருவர். இதில் யூஜிசி நான்காவது ஒருவரை போட வேண்டும் என்று கூறுகிறார்கள், தமிழ்நாட்டில் அப்படி சட்டம் இல்லை, தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தனபடி அப்படி கிடையாது. எந்த காரணமும், குறையும் கண்டுபிடிக்காத காரணத்தினால் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட வெறுப்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை. அவர் சமூக நீதிக்காக எல்லோருக்காகவும் வாழ்ந்து மறைந்தவர். சனாதன தர்மம் அதற்கு தடையாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
மசோதாவுக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மாநில அரசுதான் பல்கலைக்கழகம் ஆரம்பித்து ஆளுநர்தான் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் அனுமதி தந்துள்ளார். இந்த ஒரு பல்கலைக்கழகத்திற்குதான ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அதில் இருந்து திட்டமிட்டு என்ன நோக்கத்திற்கு செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சட்டப்படி யார் தவறு செய்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றத்தையும் மூடி மறைப்பதும் கிடையாது, துணை போவதும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போது, சமூகத்தில் என்று வரும்போது தனிப்பட்ட சிலரது விருப்பு வெறுப்பில் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் அரசால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவருவது என்பது வரும் 14ம் தேதி அமைச்சரவை கூட இருக்கிறது, நல்ல முடிவு வரும்.
ஒன்றிய அமைச்சர் முருகன் என்ன காரணத்திற்காக குற்றம்சாட்டுகிறார் என்பது தெரியவில்ைல. ஒன்றிய அமைச்சரவையில் உள்ள முருகன் தமிழ்நாடுதான் இந்தியாவில் கடந்த நான்காண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம்தான் வளர்ந்துள்ளது, ஒன்றிய அரசு புள்ளி விபரம்தான், ஒன்றிய அமைச்சரவையில் அங்கமாக உள்ளவர் அதனையெல்லாம் படிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க நிதி வந்துள்ளது என்று கூற வேண்டும் என்று அவர் கூறுகிறார். வெளிநாட்டில் இருந்து எந்த நிதி வந்தாலும் உங்கள் மூலமாகத்தானே வரும். நீங்கள் அதனை ஏன் மாநில அரசிடம் கேட்க வேண்டும். புள்ளி விபரங்களை எடுத்து நீங்களே பேசலாமே, இவ்வளவு ரூபாய் வந்துள்ளது, வரவில்லை என்பதை கூறலாம்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்கின்றனர், அதனையும் தாண்டி முதலமைச்சர் முழு முயற்சி செய்து எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் எல்லோருக்கும் பாடமாக இருப்பது தமிழ்நாடு என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர அதனை தாங்க முடியாமல் சிலர் வார்த்தைகள் கூறுகிறார்கள். எதிர்கட்சி தலைவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.