நாகர்கோவில், ஜூலை 18 –
ஏஜேஎம் பவுண்டேசன் மற்றும் பிஷப் ஆஞ்ஞிசாமி கல்வியியல் கல்லூரி முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகளுக்கு நடத்தியது. இதில் கல்லூரி செயலாளர் ஆல்வின் மதன்ராஜ் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் ஷீலா பர்னீ தலைமையில் ஏஜேஎம் பவுண்டேசன் இயக்குநர் ஜெகநாதன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முக்கிய விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர் ஜீவானந்தம் கலந்து கொண்டு “சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்த்தினார். சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் பற்றி அவர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக குளச்சல் சரக போக்குவரத்து ஆய்வாளர் சுஜாதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். போக்குவரத்து துணை ஆய்வாளர் சிதம்பர தாணு கலந்து கொண்டார். முடிவில் மாணவிகள் விபத்தில்லா தேசத்தை உருவாக்க அனைவரும் சாலை விதிகளை பின்பற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் நம்மை மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை புரிந்து கொண்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ஏஜேஎம் பவுண்டேஷன் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.