நாகர்கோவில், ஜூலை 7 –
நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்துவிட்டாலும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயில்கள் வரும்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வந்தால் சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையிலிருந்து வரும் ரயிலை உள்வாங்கும் வரை டவுன் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயில், அதன் ரயில் தடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனை தவிர்த்து இரு ரயில்களும் நிற்காமல் இரட்டை பாதையில் எதிரெதிரில் செல்லும் வகையில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் பாடப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை இந்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பணிக்காக ராட்சத கிரேன்கள் மூலம் பாலம் பொருத்தும் பணிகள் நடைபெற்றது. இதற்காக ரயில் தடத்தில் பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட நேரமான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பதில் காலை 7 மணிக்கு தாமதமாக பணிகள் நிறைவு பெற்றன. இதனால் காலை 7 மணிக்கு பின்னரே ரயில் தடத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக காலை 4.40க்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரவேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் பணகுடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வள்ளியூரில் நிறுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு பாலப்பணிகள் நிறைவு பெற்று மின்சாரம் வழங்கிய பின்னரே இந்த ரயில்கள் நாகர்கோவில் புறப்பட்டன. கோவை எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காலை 8:05 மணிக்கும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தன. இதுபோல் பெங்களூரில் இருந்து காலை 7:20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு வரவேண்டிய ரயில் காலை 8:30 மணிக்கு வந்தது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் இணைப்பு ரயிலாக திருவனந்தபுரம் பயணிகள் ரயில் காலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் கிளம்புவதற்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுபோல் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வந்துவிட்டு பின்னர் கொல்லத்திற்கு 8 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் கால தாமதமாக நாகர்கோவில் வந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது. கோவை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் உறவினர்களை அழைத்து செல்ல நாகர்கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார் மற்றும் பைக்குகளில் வந்த உறவினர்களும் ரயிலில் வந்த பயணிகளும் ஏறத்தாழ 3 மணி நேரம் தாமதம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.