மயிலாடுதுறை, ஜூலை 25 –
மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் அரசு மதுபான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் உரிமம் பெற்ற பார் ஒன்று செயல்பட்டு வந்தது. ஆனால் சட்ட விதிகளை மீறி 24 மணி நேரமும் பாரில் மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பதாக செய்து ஊடகங்களில் நேரடி காட்சிகளுடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து கள்ளச் சந்தை மதுபான விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர் செல்வம் என்பவரை மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து பாரின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள் பாரை பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையின் சூப்பர்வைசர் ஜோதிராமன் என்பவரை பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பார் நடத்துபவர்கள் செய்யும் தவறுக்கு ஊழியர்கள் பலியிடப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாக தகவல் இருந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும் 8870490380 என்ற செல்போன் நம்பருக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் ரகசியம் காப்பாற்றப்படும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.