ஈரோடு, நவ. 11 –
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை சார்பில் ஜப்பான் தலை டோக்கியோவில் பாரதி விழா நடந்தது. இதில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கவிஞர், கட்டுரையாளர், சிறு கதையாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என்ற பன்முக ஆளுமை மிக்கவர் மகாகவி பாரதி. அவரது நோக்கில் யாசிக்கிறபோது தான் அவரின் தனித்துவத்தையும் அவரது படைப்புகளின் விசயத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.
ஜப்பான் நாட்டிலேயே தமிழ்க் குடும்பங்களில் பிறந்து படித்து வளர்ந்து வருகிற பள்ளிக் குழந்தைகள் இத்தனை பேர் பாடல்களை அதற்கே உண்டான லயத்துடனும் கம்பீரத்துடனும் மேடையில் பாடுவதைப் பார்க்கும் போது புதிய நம்பிக்கை பிறக்கிறது. அயலகங்களுக்கு சென்று வாழும் குழல் ஏற்பட்டிருப்பினும் தாய்மொழி மறக்காமல் இருக்க செய்வதிலும் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுவதிலும் தனி அக்கறை செலுத்தியிருக்கும் பெற்றோர்கள் பாராட்டத்தக்கவர்கள்.
திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் தமிழ் மொழிக்கே அடையாளமாக விளங்குபவர்கள். மனிதர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும், ஒற்றுமையை உருவாக்குவதுமே சங்க இலக்கியத்திலிருந்து தமிழ்ச் சான்றோர்களின் படைப்பு நோக்கமாக கொண்டுள்ளது. உலக தமிழர்கள் ஒன்றிணைவது இன்றைய காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஜப்பான் நாட்டின் இந்திய துணைத் தூதர் சந்துரு அப்பர், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் கலைக்கோவன் ஆகியோர் காணொலி மூலம் கருத்துரை வழங்கினர். ஜப்பான் இலக்கிய ஆளுமைகள் செந்தில்குமார், கோவிந்தராஜன் ஆகியோர் உரையாற்றினர். விழாவில் ஜப்பானிலுள்ள இந்தியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேரவையின் ஜப்பான் கிளைத் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். ஆலோசகர் கமலக் கண்ணன் நன்றி கூறினார்.



