நாகர்கோவில், நவ. 12 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வில்லுக்குறி சாலையில் சொகுசு கார் ஒன்று உயர் அழுத்த மின் கம்பத்தில் நேற்று மதியம் லேசாக மோதியதில் மின் கம்பம் இரண்டாக உடைந்து சாலையில் சரிந்து நின்றது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்துனர். உடனே
அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மோதிய கார் ஓட்டுநருக்கு ரூபாய் 24 ஆயிரம் அபராதம் விதித்து அங்கிருந்த பொதுமக்கள் ஒத்துழைப்புடன் உடைந்த மின் கம்பத்தை நைலான் கயிறுகளை கொண்டு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து விட்டு நாளை சரி செய்வதாக கூறி சென்றுள்ளனர். மறுநாள் ஆகியும் இதுவரை மின்சார வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் காங்கிரீட் கலவையில் ஜல்லி கற்கள் இல்லாமல் மெல்லிய கம்பிகள் கொண்டு சிமெண்ட் மற்றும் பாறை பொடிகள் கொண்டு அமைக்கப்பட்டதாகவும், உடைந்த மின்கம்பம் இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் மின் கம்பம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.
மேலும் அதிக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மின் வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லாமல் உடைந்த ஆபத்தான மின்கம்பத்தை கயிறுகள் கொண்டு கட்டி வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



