விளாத்திகுளம், செப்டம்பர் 19 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
மேலும் முகாமில் ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த மங்கையர்கரசி என்ற மூதாட்டி தான் புதிதாக வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வாங்கியுள்ளார். பின்னர் கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் மேற்கண்ட வீட்டிற்கு அருகில் மின் கம்பிகள் பாதுகாப்பற்ற நிலையில் சென்றதால் அந்த மின் கம்பிகளை மாற்றுவதற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் வீட்டின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் மின் வயர்கள் செல்வதால் மின்விநியோகம் வழங்குவது தாமதமாக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரியை அழைத்து மின் வயரை மாற்றி அமைப்பதற்கான ரூ.13,000 தொகையை சம்பவ இடத்திலேயே தனது சொந்த நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வழங்கியதால் அம்மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல்,
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், இமானுவேல், ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், மாவட்ட பிரதிநிதி முனியசாமி, கிளை செயலாளர்கள், திமுக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி, மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



