விழுப்புரம், ஜூலை 15 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 291 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 236 முகாம்கள் ஊரக பகுதியிலும் 55 முகாம்கள் நகர் பகுதியில் நடைபெற உள்ளது.
இம்முகமானது பத்தாயிரம் என்கிற மக்கள் தொகை அடிப்படையில் ஒரு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். ஊரக பகுதிகளில் 15 துறை சார்பாக 46 சேவைகளும் நகர் பகுதியில் 13 துறை சார்பாக 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கு தகுதியடைந்த பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவர்கள் இம்முகாமில் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இதற்கென ஒவ்வொரு முகாமிலும் தனியாக நான்கு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே வழங்கப்படும். எனவே முகாமிற்கு வருகை புரியும் மகளிர்கள் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதற்கான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். இது மட்டுமில்லாமல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கான அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அடிப்படை மருத்துவ பரிசோதனை போது உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடப்பு மாத கடைசியில் தொடங்கப்படும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று தங்களுக்கான கோரிக்கைகளை விண்ணப்பங்களாக வழங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.