ஈரோடு, ஆக. 29 –
ஈரோடு கலைமகள் பள்ளி அருகே மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் குருபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் பங்காரு அடிகளார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் மனோகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கடந்த 23-ம் தேதி காலை கொடி ஏற்றுதல் மற்றும் குருபூஜை விழாவுடன் விழா தொடங்கியது. 26-ம் தேதி முதல் கால வேள்வி பூஜையும் இரண்டாம் கால வேள்வி பூஜையும் 27 ந் தேதி மூன்றாம் கால வேள்வி பூஜை நான்காம் கால வேள்வி பூஜையும் 28 ந் தேதி ஐந்தாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையொட்டி 60 வயதான 3 பேருக்கு திருமணம் உள்பட 155 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் 112 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் மளிகை பொருட்கள் தையல் இயந்திரம் போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மீக இயக்கத்தினர் செய்திருந்தனர்.



