நாகர்கோவில், அக். 11 –
கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இராஜாக்கமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்து செய்தியாளர்களிடையே கூறியதாவது: குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 தீயணைப்பு நிலையங்கள் காணப்படுகிறது. தற்போது இராஜக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்தினை சேர்த்து மொத்தம் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இதுவரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் இல்லை. 2004-ம் ஆண்டு சுனாமியில் இராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்கள் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து உள்ளனர்.
தற்பொழுது அடிக்கடி மேற்படி கடற்கரை கிராமங்களில் கடலரிப்பு மற்றும் கடல் நீர் கிராமத்தில் புகுந்து வீடுகள் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அருகில் உள்ள தெக்குறிச்சி, முருங்கவிளை, பண்ணையூர் கிராமங்களில் அதிக அளவில் தும்பு மில் ஆலைகள் உள்ளது. அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. சுற்றிலும் மீன் வலை தயாரிப்புக்கூடங்கள் அதிக அளவில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் இராஜாக்கமங்கலத்தை சுற்றி பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை சுற்றுலாத்தலங்களான லெமூர் கடற்கரை மற்றும் முட்டம் கடற்கரை, கலங்கரை விளக்கம் ஆகியவை இதன் அருகாமையில் அமைந்துள்ளன. இந்த சுற்றுலாத்தல கடற்கரையில் கடல் சீற்றம் எப்பொழுதும் அதிகமாக இருப்பதால் அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் கடலலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். அருகில் தீயணைப்பு நிலையம் இருந்தால் விரைந்து சென்று பணியாற்ற முடியும். அதனை கருத்தில் கொண்டு இங்கு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
என கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என். சுரேஷ் ராஜன், விஜய் வசந்த் எம்பி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்எல்ஏ, தீயணைப்பு துறை துணை இயக்குநர் திருநெல்வேலி மண்டலம் ப. சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



