ராமநாதபுரம், ஜுலை 15 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுக்க நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை முடிவு செய்து உள்ளது. மேலும்
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய கலைகளை கற்றுத்தர உள்ளதாக அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் கூறினார்.
ராமநாதபுரத்தில் நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தமிழகம் முழுவதும் விவசாயிகள் மகளிர் ஆதரவற்றோர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது. இதன்படி அறக்கட்டளையின் 11-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடப்பாண்டு ஆக. 18ல் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், அரசு பள்ளிகளில் 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 10 அரசு பள்ளிகளை சேர்ந்த முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு 60 பேருக்கு மடிக்கணினி வழங்க உள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு தொடக்கப் பள்ளிகளை தத்தெடுத்து அதில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தனித்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.
கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி, சுய தொழில் தொடங்க, நலிந்த நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அறக்கட்டளையின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகள், முதன்மை பயனாளர்கள், பயனாளிகள், பி.ஆர்.கே என்டர்பிரைசஸ் நிறுவனத் பங்குதாரர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள், பங்குதாரர்களின் பங்கு தொகை வரைவோலை, காசோலையாக வழங்கப்படும் என நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் தெரிவித்தார்.