இரணியல், செப். 15 –
இரணியல் அருகே உள்ள மேலகட்டிமாங்கோடு அடுத்த சாமி விளை பகுதியில் சேர்ந்தவர் ராஜபீமன் மகன் மகேந்த் (23). என்ஜினியரிங் முடித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்கு விடுமுறையில் வந்த மகேந்த் சம்பவத்தன்று பேயன் குழியில் நண்பரை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. செருப்பங்கோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தீடிரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பலி ஆனார். இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



