திங்கள் சந்தை, மார்- 8
தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (47). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு மரிய ஜான்சன் வீட்டிலிருந்து மனைவிக்கு பைக்கில் சாப்பாடு கொண்டு சென்றார்.
அப்போது சுங்கான் கடை பகுதியில் வைத்து பின்னால் வேகமாக வந்த லாரி பைக்கை முந்தி செல்ல முயன்ற போது, பைக்கில் லாரி மோதியது. இதில் கீழே விழுந்த மரிய ஜான்சன் கால்களில் லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.