நாகர்கோவில், செப். 25 –
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினரையும் உள்ளடக்கி தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர்.
போட்டிக்கான கடிதத்தை “எனது முன்மாதிரிக்கு கடிதம் (Letter to My Role Model)” என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும். “01.01.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் / நிறைவு பெறாதவர்” என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000, இரண்டாம் பரிசு ரூ. 10000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000, இரண்டாம் பரிசு ரூ. 25000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000 வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இப்போட்டியில் பங்குபெற்று பயனடைய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



