சென்னை, ஜூலை 28 –
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் 20ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்ற தவறிய திமுக அரசின் நிலையை கண்டித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ஜே. ராபர்ட், மாநிலப் பொருளாளர் கி. கண்ணன், மாநிலத்துணைத் தலைவர்கள் ஞானசேகரன், வேல்முருகன், சென்னை மாவட்டச் செயலாளார் விஜயகாந்த், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளார் கேசவன், செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் விஜயகுமார் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜே. ராபர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 1.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என்று அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை மற்றும் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை புறந்தள்ளி இரண்டு விதமாக ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதை களைய கோரி கடந்து 15 ஆண்டுகளாக எங்களது எஸ்.எஸ்.டி.ஏ இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. 2009 இல் பணிக்கு சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்ற 16 ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்கள் ஊதியத்துடன் பொருளாதாரத்தின் நெருக்கடியில் பணிபுரிந்து வருகிறோம். இனியும் காலதாமதப்படுத்தாது மூன்று நபர் குழுவின் அறிக்கையை பெற்று விரைவில் தேர்தல் அறிக்கை எண் 311 கூறியபடி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம் ” பலன் கிடைக்க ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்தப்படுத்தும் விதத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்றார்.