நாகர்கோவில், ஜூலை 23 –
ஆடி முதல் செவ்வாய் என்பதால் அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. முப்பந்தல், தாழக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தெய்வ அருள், பித்ருக்கள் அருள் பெற வேண்டி வழிபாடுகள் நடத்தப்படும் மாதம் என்பதால் இந்த மாதம் சுப காரியங்கள் இந்துக்கள் வீடுகளில் நடத்தப்படுவது இல்லை. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் விசேஷமாகும்.
குமரி மாவட்டத்தில் ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். அதன்படி 22ம் தேதி ஆடி முதல் செவ்வாய் ஆகும். இதையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், நாகர்கோவில் நடுகாட்டி இசக்கி அம்மன் கோயில், சுசீந்திரம் முன்னு தித்த நங்கை அம்மன் கோயில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி காமாட்சி அம்மன் கோயில், கிருஷ்ணன் கோயில் காமாட்சி அம்மன் கோயில், ஆதிபராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
பெண்கள் கூல் வைத்தும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்தும் அம்மனுக்கு வழிபாடு நடத்துகின்றனர். தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்வார்கள். இதே போல் முப்பந்தலில் உள்ள இசக்கியம்மன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதனால் தாழக்குடி மற்றும் முப்பந்தல் கோயில்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.