திருப்புவனம், ஜூலை 09 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கநாதிருப்பு கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாணிக் கருப்பண சுவாமி திருக்கோயில் நூதன இராஜ கோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 26.06.25 அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 05.07.25 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார் கீழ வெள்ளூர் மணிகண்டன் சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதற்கால பூஜை மங்கள இசையுடன் தீர்த்த பூஜை யாகசாலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 06.07.25 ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணியளவில் இரண்டாம் கால பூஜை மங்கள இசையுடன் ஸ்ரீ ஹரித்ர கணபதி பூஜை சங்கல்பம் புண்யாக வாசணம் ஜெப பாராயணம் மூலமந்திரம் முழங்க மஹா பூர்ணாஹூதி தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 07.07.25 திங்கட்கிழமை காலை சுமார் 09.30 மணியளவில் பூர்ணாஹூதியுடன் யாகசாலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி திருக்கோயிலை சுற்றி வலம் வந்து அதிர் வேட்டுக்களுடன் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் விண்ணதிரும் கரகோஷத்துடன் கும்பத்தின் மேல் கருடாழ்வார் ஆசியுடன் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் கோயிலை சுற்றி வட்டமிட்டது. பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தரிசனம் காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்த வாரி தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு பக்தர்கள் முன்னிலையில் 18 வகையான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இங்கு திரைப்பட நடிகர் சூரி வருகை புரிந்தார். அவருக்கு கிராமத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். சூரி
விழாவிற்கு வருகை புரிந்த பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சொக்கநாதிருப்பு கிராமத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க இதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா நடைபெறுவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
மின்சாரத் துறையின் சார்பில் தடை இல்லாத அளவுக்கு மின் விநியோகம் செய்திருந்தனர். தீயணைப்புத் துறையின் சார்பில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தது.
மேலும் இந்த விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மானாமதுரை
உதவி கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் பழையனூர் காவல் நிலையம் சார்பாக
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்கள் வந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு பணியில்
பழையனூர் காவல் நிலையம் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சொக்கநாதிருப்பு கிராமத்தின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.