அஞ்சுகிராமம், ஆக. 25 –
அஞ்சுகிராமம் பேரூராட்சி 12-வது வார்டு பொதுமக்கள் மற்றும் பாரத மாதா நூலக வாசகர்கள் தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் கடைகோடியில் அமைந்துள்ளது அஞ்சுகிராமம் பேரூராட்சி. 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான இலட்சுமிபுரம் சிவ சுப்பிரமணியபுரம், பரப்பு விளை பகுதிகளில் ஒன்றிய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி சுமார் இரண்டு ஆண்டுகளாக மந்த நிலையில் நடைபெற்று முடிந்துள்ளது.
அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு ஜல்-ஜீவன் திட்டத்தையும், அம்ரூத் 2.0 என்று தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியின் கீழ் திட்டங்கள் வகுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழகம் முழுவதும் ஒப்பந்தகாரர்கள் மொத்தமாக டெண்டர் எடுத்து சரிவர துரிதமாக பணிகளை செய்யாமல் சாலைகளின் காங்கிரீட், பேவர்பிளாக், தார்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டி பைப்புகள் பதிக்கப்பட்டது.
கடந்த 2023-டிசம்பர் மாதம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பணிகள் ஒதுக்கப்பட்டு 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிக்க தீர்மாணிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையாததால் கூடுதல் மூன்று மாதங்கள் ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும் 75% பணிகள் முடிவடையாமல் ஒப்பந்தகாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கருத்துவேறுபாட்டால் பணிகள் தோய்வு நிலையில் உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி ஒரு வருடமாக காத்திருப்போர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
மேலும் குடிநீர் இணைப்புக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள காங்கீரிட், பேவர்பிளாக் ஓடுகளை அகற்றியும், கிராம சாலைகள், தேசிய சாலைகளை தோண்டி ஆள் உயர குண்டுகளை தோண்டி மூடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எங்கள் பகுதியில் தெருக்கள் மிகவும் குறுகலாக உள்ளதால் டூவீலர்களில் வருவோர் விபத்துக்களில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் 80 வயது மூதாட்டி ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து படுங்காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் தோண்ட பட்ட சாலைகளை சீர்செய்து தரும்படி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதினால் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி என நிர்வாகம் புறக்கணிக்கிறதோ என ஐயம் ஏற்பட்டுள்ளது.
எனவே காலை, மாலை என இரு சமயங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாலைகளில் உள்ள பேவர் பிளாக் கற்களை சரி செய்து வருகிறார்கள். எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற அரசு அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டுமென இலட்சுமிபுரம், சிவ சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



