திருப்புவனம், ஆக. 07 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அஜித்குமார் கண்களில் தூவப்பட்ட மிளகாய்ப்பொடி வாங்கிய கடை மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் அரசினர் விடுதி ஆகிய பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்டு தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டதுடன் சி.பி.ஐ யிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த ஜூலை 12-ம் தேதி சி.பி.ஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததுடன் டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முதலாவதாக அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றினர். மேலும் கடந்த 5-ம் தேதி கைதான ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 காவலர்களை சிபிஐ கஸ்டடியில் எடுத்து 23 மணி நேரம் விசாரணை முடித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விசாரணையின் போது காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மீண்டும் மடப்புரம் வந்த சி.பி.ஐ அதிகாரிகள் அஜித்குமார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவியதாக கூறப்படும் நிலையில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை மற்றும் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரசினர் மாணவர் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் விடுதி காவலாளி மற்றும் அப்பகுதியில் கடை நடத்தி வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புளியந்தோப்பு பகுதிக்குள் நுழையும் பகுதியில் உள்ள மற்றொரு தோப்பு மற்றும் அப்பகுதியில் அஜித்குமாருக்கு உணவு வாங்கி கொடுத்த உணவகம் ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.