தஞ்சாவூர், ஜூலை 6 –
தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என அமைச்சர் வினோத் ரவி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்டு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு அமைச்சர் வினோத் ரவி தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான், வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலருமான சங்கர், சர்க்கரை துறை ஆணையர் கண்ணன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் சந்திரசேகர் சகாமுரி, மலை பயிர்கள் துறை இயக்குனர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் வினோத் ரவி பேசியதாவது: தொன்மை வாய்ந்த வேளாண்மை தொழில் காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உணவு தானிய தன்னிறைவுக்கு மட்டுமே என இருந்த காலம் மாறி தற்போது வணிக ரீதியாகவும் உருமாற்றம் செய்திட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளை வணிக ரீதியாகவும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி சமூகத்தில் உயர் நிலை அடையும் உன்னதமான நோக்கத்துடன் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு உயரிய திட்டங்களை வகுக்க எனக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் கருத்து கேட்பு கூட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயம் மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகள் அதற்கான தீர்வுகள் புதிய நவீன தொழில் நுட்பங்கள் சாகுபடி செலவீனம் குறைத்தல் வேளாண் நிலங்களை பாதுகாத்தல், நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல், உயிர்ம வேளாண்மையை மாற்று பயிர் ஊக்குவித்து மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதை ஒருங்கிணைத்தல், பண்ணை எந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் வேளாண்மை புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக பட்டறிவு பெற்ற விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அல்ல பல கருத்துக்கள் வழிமுறைகள், நடைமுறை இன்னல்கள், மற்றும் அதற்கான தீர்வுகள் அனை த்தும் பெற்று அவை யாவும் முதலமைச்சர் வழிகாட்டுதலோடு திட்டங்களாக தீட்டப்பட்டு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப் பாக வெளியிட இந்த அரசு மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகிறது. இதன் முன்னெடுப்பாக தமிழக முதலமைச்சர் பதவியேற்ற உடன் விவசாயிகளின் துயர் துடைத்திடும் விதமாக ரூபாய் 134.83 கோடி ஒதுக்கீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ஆணை வழங்கிய அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சர் கடுமையான நிதி நெருக்கடியிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் கோடி வரை பயிர் கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விவசாயிகளுக்கான முதன்மையான பிரச்சனையே பாசன நீர் தங்களது வயலுக்கு முறையே வந்து அடையாதது தான். இதனை களையும் பொருட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 2499 கிமீ நீளத்திற்கு சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் திட்டமாக தொகுத்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத விவசாயிகள் தங்களது கருத்துகளை இணைய வழி வாயிலாக உழவர் செயலி மூலமாக பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் வினோத் ரவி, ஷாஜகான் ஆகியோர் விவசாய பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். முன்னதாக விவசாயிகளுக்கு தகவல் தொழில் நுட்பங்களை தெரிவிக்கும் மேலாண்மை துறை, தோட்ட கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றிதழ் அளிப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் விஜய் சரவணன், துரை சந்திரசேகரன், கோவி. செழியன், ஆர்.வைத்திலிங்கம், அண்ணாதுரை, அசோக் குமார், பூண்டி. கலைவாணன், நிவேதா முருகன், எஸ்.காமராஜ், மாரிமுத்து, கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர்கள் முருகேசன், சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன், உதவி கலெக்டர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



