கன்னியாகுமரி, ஆக. 3 –
மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோவில் கட்டுமான தொழிலாளர் நல சங்க தலைவர் மயிலை வேதமணி, செயலாளர் முத்துச்செல்வன், பொருளாளர் சுந்தர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சியில் சிற்ப கலை தொழில் தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். மயிலாடி சிற்பக் கலை இந்திய அரசால் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இங்கு கலைநயம் மிக்க வாஸ்து முறை தவறாமல் கற்களை கொண்டு சிலைகள், கோயில் கட்டிடங்கள் செய்யும் கலை வல்லுநர்கள், பாரம்பரிய கலைஞர்கள் சிற்பிகள், ஸ்தபதிகள் உள்ளார்கள். மேலும் அண்டை மாநிலத்திற்கும் மற்றும் வெளிநாட்டிற்கும் கல்லில் செய்த ஏராளமான சிற்பங்களை அனுப்பியுள்ளோம்.
மயிலாடி சுற்றுவட்டார பகுதியில் கல் சார்ந்த சிற்ப தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். மயிலாடியை பொறுத்தவரை அண்டை மாநிலமான கேரளாவையே நம்பி தொழில் செய்து வருகின்றோம். ஆகவே எங்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு சிற்பங்கள் செய்ய தேவையான கற்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கி மயிலாடி மக்கள் மற்றும் ஏராளமான கல்சிற்ப தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


