மதுரை, ஜூலை 03 –
மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல். இந்த மெகா ஊழலுக்குப் பின்புலமாக உள்ளது யார் அந்த சார்? என மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், மதுரை மாநகராட்சியின் மேயர்கள், மண்டல தலைகளை உடனடியாக டிஸ்மிஸ் வேண்டும். மேலும், துறையின் அமைச்சரான கே.என். நேரு இது குறித்து எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருப்பது ஏன்? தமிழகத்தில் கோட்டை முதல் ஊராட்சி வரை கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்ற நிலை இருந்து வருகிறது. இதைத்தான் கழகப் பொதுச் செயளாலர் எடப்பாடியார் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார்.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால், இன்றைக்கு ஊழல் செய்வதில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டில் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் 1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்தனர். அதில் குறிப்பாக 370 கோடி ரூபாய் சொத்து வரி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த பட்ஜெட் மக்களுக்கு எதுவும் பயன்படவில்லை. மேலும் கடுமையாக சொத்து வரி உயர்த்தப்பட்டு அப்பாவி மக்களை கசக்கி பிழிந்து, வசதி படைத்தவரை வாழ வைக்கிறது மதுரை மாநகராட்சி.
மேலும் மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டும் கட்டிடங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கு மேல் வணிக கட்டிடங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2022 முதல் வணிக நிறுவன கட்டடங்களுக்கு, குடியிருப்பு கட்டிடங்களின் வரியை நிர்ணயம் செய்யப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது.
இந்த முறைகேடு குறித்து ஆணையாளர் காவல்துறையிடம் புகார் கொடுத்த பின்பு தற்போது 8 பேரை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த மிகப்பெரிய புள்ளிகள் இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகிறார்கள். அந்த ஆளுங்கட்சியை சேர்ந்த யார் அந்த சார்? என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று மதுரை மாநகராட்சி மேயரை, மண்டல தலைவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தொடர்ந்து மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. துறையில் அமைச்சரான கே.என். நேரு உடனடியாக மதுரை மாநகராட்சிக்கு நேரில் வந்து ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. இதுவரை எந்த பதிலும் கூறாமல் ஏன் மௌனமாக இருக்கிறார்? இது குறித்து முழு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதே போல மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இதுகுறித்து எந்த பதிலும் கூறவில்லை.
அதே போல காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலினுக்கு இது குறித்து தெரியுமா ?அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும் ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள், 1,296 கோடியில் குடிநீர் திட்டம், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள், பாலங்கள், போன்ற வளர்ச்சி திட்டங்களின் மூலம் 5000 கோடி அளவில் திட்டங்களை தந்தார்.
ஆனால் அமைச்சர் கே.என். நேரு 2024 ஆண்டில் சட்டமன்றத்தில் ஆயிரத்து 500 கோடி அளவில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கும், குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறினார். இதுவரை எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்று அவருக்கும் தெரியவில்லை மதுரை மாநகராட்சிக்கும் தெரியவில்லை. அதே போல மதுரை மாநகராட்சியில் 13 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும், 1540 கிலோமீட்டர் மாநகராட்சி சாலைகளும் உள்ளது. இதில் 265 கிலோமீட்டர் சாலைகளில் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகிறது. 1253 கிலோமீட்டர் சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளது. இதில் அதிகமான சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது. இதற்கான நிதி கூட ஒதுக்கப்படவில்லை. விரைவில் மழைக்காலங்கள் வருவதால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என கூறினார்.