மதுரை, ஜூன் 30 –
மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் பாப்பாகுடியில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் வருகை தந்தார். அப்போது கோவில் பாப்பா குடியை சேர்ந்த பகுதி மக்கள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகவும் பகலிலும் மின்தடை ஏற்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அமைச்சர் மூர்த்தியிடம் புகார் அளிக்க வந்தனர்.
ஆனால் புகார் அளிக்க வந்த பொதுமக்களை நெருங்க விடாமல் அமைச்சருடன் வந்த அதிகாரிகள் மற்றும் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரை பின்தொடர்ந்தனர். தங்கள் பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது.
மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் செயலாற்ற திறன் ஆகியவற்றை கூறுவதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பின்தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரை சந்திக்க முடியாததால் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்புவதற்காக சென்ற அமைச்சரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் எனவும் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சரை சூழ்ந்து கொண்டு பரபரப்பான புகார்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து அமைச்சருடன் வந்த உதவியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என செய்தியாளர் அருகில் வந்து அமைச்சரை மறைத்தவாறு நின்று கொண்டனர். இருந்தும் அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை மின்தடை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.