கிருஷ்ணகிரி, செப். 3:
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பேராசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்த முனைவர் வெங்கடேசன் பதவி உயர்வு பெற்று, பாலக்கோடு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் அநுராதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள் முனைவர் திலகவதி, முனைவர் தனராசு மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் ராஜா, முனைவர் முரளி, முனைவர் வடிவேல் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து, கௌரவ விரிவுரையாளர் சத்தியகுமார் எழுதிய ‘வானத்திற்கு நீலத்திரை’ நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை பாலக்கோடு கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வெளியிட, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அநுராதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியை கௌரவ விரிவுரையாளர் முனைவர் செந்தில் தொகுத்து வழங்கினார். இதில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், பி.டி.ஏ. ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



