மார்த்தாண்டம், ஆக. 28:
பளுகல் அருகே, அண்ணன் மது அருந்துவதற்காக தனது பைக்கை எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரனின் மகள் ராஜலட்சுமி (26). திருமணமாகாமல் வீட்டில் வசித்து வந்த இவர், தனது பைக்கை அண்ணன் ராஜு அடிக்கடி எடுத்துச் செல்வதை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ராஜு பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதால் மனமுடைந்த ராஜலட்சுமி சாப்பிடாமல் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் துப்பட்டாவால் ராஜலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


